Sunday, December 18, 2011

வெளிநாடு ஊழியங்கள்

தேவனுடைய வீட்டிலிருந்து உலகமெங்கும் சுவிசேஷம் எடுத்துச் செல்லப்பட வேண்டுமென்பதுதான் தேவனுடைய சித்தம். முதன் முதலாக 1984ம் ஆண்டு பஹ்ரெய்ன் தேசத்திற்கு கர்த்தர் கொண்டு சென்று பயன்படுத்தினார்...

இயேசு விடுவிக்கிறார் வெளிநாடு ஊழியத்தைப் பற்றி...
பூமியின் கடைசி பரியந்தமும் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள். அப். 1:8
உலகமெங்கும் கடல் கடந்து...
தேவனுடைய வீட்டிலிருந்து உலகமெங்கும் சுவிசேஷம் எடுத்துச் செல்லப்பட வேண்டுமென்பதுதான் தேவனுடைய சித்தம். முதன் முதலாக 1984ம் ஆண்டு பஹ்ரெய்ன் தேசத்திற்கு கர்த்தர் கொண்டு சென்று பயன்படுத்தினார். அதைத் தொடர்ந்து அரபு நாடுகளான சவுதி அரேபியா, குவைத், துபாய், அபுதாபி, ஒமன், சார்ஜா போன்ற தேசங்களுக்கும், ஜெர்மனி, ஹாலந்து, பிரான்ஸ், நார்வே, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, போன்ற ஐரோப்பிய தேசங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, புருணை, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, கனடா, இந்தோனேஷியா போன்ற தேசங்களுக்கும் சுவிசேஷத்தை சுமந்து செல்ல தேவன் கிருபை பாராட்டியிருக்கிறார். இவைகளில் குறிப்பாக சில தேசங்களுக்கு வருடந்தோறும் சென்று அங்குள்ள தமிழ்த்திருச்சபைகளில் எழுப்புதல் ஏற்பட உதவி செய்ய தேவன் கிருபை பாராட்டியிருக்கிறார்.
சிங்கப்பூர்
கடந்த 20 வருடங்களாக சிங்கப்பூர் தேசத்திற்கு சென்று அங்குள்ள தமிழ் திருச்சபைகள் வளர ஊழியம் செய்திருக்கிறோம். குறிப்பாக கடந்த 18 வருடங்களாக 3 நாட்கள் உபவாச ஜெபம் நடத்தியதின் விளைவாக அத்தேசத்தில் தேவன் மகிமையான ஆசீர்வாதங்களை கட்டளையிட்டிருக்கிறார். தமிழ் திருச்சபை மக்களுக்குள் ஜெப ஆவியை ஊற்றியிருக்கிறார். தேசத்திற்காக ஜெபிக்கிற ஏராளமான ஜெபவீரர்களை தேவன் எழுப்பியிருக்கிறார். ஒவ்வொரு உபவாச ஜெபத்தின் போதும் வரும் நாட்களில் தேசத்தில் நடைபெறப்போகும் காரியங்களை கர்த்தர் வெளிப்படுத்துவார். அதற்காக பாரத்தோடு ஜெபங்கள் ஏறெடுக்கப்படும். கர்த்தர் செய்கிற அற்புதங்களைக் கண் கூடாக கண்டு மகிழ்ந்திருக்கிறோம்.
  1. திருச்சபைகள் வளர்ந்து பெருகியிருக்கிறது. சீன திருச்சபைகளின் வேகமான வளர்ச்சி, குறிப்பாக சீன வாலிபர்கள் திரள் திரளாய் இரட்சிக்கப்படுகிறார்கள். இந்த ஜெபம் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் ஒரு சில தமிழ் திருச்சபைகள் மாத்திரம் இருந்தது. இன்று 60க்கும் மேற்பட்ட தமிழ் திருச்சபைகள் தோன்றியிருக்கிறது.
  2. கடின இருதயமுள்ள மலாய் இன மக்களுக்குள்ளும் மாபெரும் மாற்றங்கள். அநேகர் கர்த்தருடைய பிள்ளைகளாக மாறியிருக்கிறார்கள்.
  3. ரவுடியிஸம் அதிகமாக ஓழிக்கப்பட்டிருக்கிறது.
  4. வேலைக்காக வருகிற தமிழர்கள் அநேகர் அத்தேசத்தில் இரட்சிக்கப்படுகிறார்கள்.
  5. பொருளாதார வீழ்ச்சிக்காக பாரத்தோடு ஜெபித்தோம். மிக விரைவில் ஆச்சரியமான மாற்றத்தை தேவன் கட்டளையிட்டார்.
  6. அத்தேசத்தின் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் கர்த்தருடைய பிள்ளைகள், வேதபுத்தகத்தை கையில் ஏந்தியவாறு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.
  7. கொள்ளை நோய்கள், கடல் வழி ஆபத்துகள், புகைமூட்டம் வந்த போழுதெல்லாம் பாரத்தோடு ஜெபித்தோம் தேவன் பாதுகாத்தார். சுனாமி தாக்காதபடி கர்த்தர் பாதுகாத்தார்.
  8. கல்வித்துறையில் பிள்ளைகளும் பெற்றோரும் மகிழ்ச்சியடையத் தக்கதான நல்ல மாற்றங்கள் உண்டாகியிருக்கின்றன.
சிங்கப்பூர் சமாதான சமூகசபை போதகர் பாஸ்டர் மில்டன் லாசரஸ் அவர்கள் உபவாச ஜெபத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதைத் தொடர்ந்து நடைபெறுகிற விடுதலைப் பெருவிழாவிலும் கர்த்தர் பலத்த அற்புதங்களை செய்து அநேகரை ஆசீர்வதித்திருக்கிறார்.
King of Glory திருச்சபை மற்றும் ஆங்கிலிகன் திருச்சபை மூலம் நடத்தப்பட்ட ஆத்தும ஆதாய பயிற்சியின் மூலம் நூற்றுக் கணக்கானோர் ஆத்தும ஆதாயகர்களாக மாறினார்கள். இதன் மூலம் இந்த சபைகளில் நல்ல வளர்ச்சியை தேவன் கட்டளையிட்டு வருகிறார். சிங்கப்பூர் கர்த்தருடைய தேசம் என்று அழைக்கப்படுகிற நாள் மிக சமீபத்தில் உள்ளது என்பது எங்கள் விசுவாசம்.
மலேசியா
மலேசியா தேசத்திற்கும் ஆண்டு தோறும் சென்று ஊழியம் செய்வதின் விளைவாக அந்த தேசத்தின் திருச்சபைகளிலும் தேவன் மாபெரும் வளர்ச்சியை கட்டளையிட்டிருக்கிறார். அத்தேசத்திலுள்ள ஆங்கிலிக்கன், மெதடிஸ்ட், லூத்தரன் திருச்சபைகள் மற்றும் தாவீதின் கூடாரம் (பாஸ்டர் மேனன் மனாசா, ஈப்போ) Four Square Family Center (பாஸ்டர் சைமன் சந்திரன், தைபிங்) மற்றும் அநேக திருச்சபைகள் நமது ஊழியத்தின் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றன. பல ஆத்தும ஆதாய பயிற்சி முகாம்கள், ஜெபமுகாம்கள் நடத்தியதின் விளைவாக ஏராளமான ஜெபவீரர்கள், ஆத்தும ஆதாயகர்கள் மலேசியா தேசத்தில் எழும்பி ஊழியங்களை செய்து வருகின்றனர்.
கனடா, அமெரிக்க ஊழியங்கள்
கனடா தேசத்தில் பாஸ்டர் வின்சென்ட் சகாயநாதன் தலைமையில் இயங்கி வரும் டொரன்றோ அறுவடை மிஷனெரி திருச்சபையில் (Toronto Harvest Missionary Church) ஊழியங்களை நிறைவேற்ற கடந்த 13 ஆண்டுகளாக சென்றுவர கர்த்தர் கிருபை பாராட்டியிருக்கிறார். பன்னிரெண்டு நபர்களோடு ஆரம்பிக்கப்பட்ட இத்திருச்சபை இன்று 700க்கும் அதிகமாக விசுவாசிகளையுடையதாக விளங்குகிறதென்றால் அதில் நமது ஊழியத்திற்கும் ஒரு சிறிய பங்கு இருக்கிறது என்பதை தாழ்மையோடு கூறிக் கொள்கிறோம். அந்த திருச்சபை பத்தாயிரம் விசுவாசிகளுடைய சபையாக வளர வேண்டுமென்பதே எமது விருப்பமும், ஜெபமுமாகும்.
அமெரிக்கா தேசத்திற்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சென்று மூன்று நாட்கள் உபவாச ஜெபம் மற்றும் நற்செய்தி கூட்டங்கள் நடத்திவர தேவன் அருள் புரிந்திருக்கிறார். கர்த்தர் மீது ஆதியில் கொண்டிருந்த அன்பை இழந்த அந்த தேசம் இன்று நிலைநிற்கிறதென்றால் அதற்கு காரணம் பல தேவப்பிள்ளைகளின் கண்ணீரின் ஜெபம்தான். இன்று அந்த தேசத்திற்காக திறப்பிலே நிற்க ஏராளமான ஜெப வீரர்களை தேவன் எழுப்பியிருக்கிறார். அதற்கு நமது ஊழியத்தையும் ஒரு கருவியாக தேவன் பயன்படுத்திவருகிறார்.

No comments:

Post a Comment